தாம்பரம் அடுத்த கேம்ப் ரோட்டில் அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையின் குறுக்கே இருந்த தடுப்புகள் மீது மோதி, வாகன ஓட்டிகள் மீதும் மோதியதால் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனையடுத்து அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் விஜயராகவன் தாக்கல் செய்த அறிக்கையில், உத்தர பிரதேசம், மஹாராஷ்டராவுக்கு அடுத்து மூன்றாவது இடமாக தமிழகத்தில் 2014-இல் 1லட்சத்து 50 ஆயிரத்து 190, 2015-இல் 1லட்சத்து 50 ஆயிரத்து 642, 2016-இல் 1லட்சத்து 70 ஆயிரத்து 218, 2017-இல் 1லட்சத்து 60 ஆயிரத்து 157, 2018-இல் 1லட்சத்து 20 ஆயிரத்து 216, சாலை விபத்துகள் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2017இல் 7 ஆயிரத்து 259, 2018இல் 7 ஆயிரத்து 586 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதேபோல் 2017இல் ஆயிரத்து 300, 2018இல் ஆயிரத்து 263 உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 71 லட்சத்து 41 ஆயிரத்தி 431 வாகனங்கள், 2018ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஓட்டுநர் உரிமம் 1 கோடியே 88 லட்சத்து 67 ஆயிரத்தி 911 வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விபத்துகள் ஏற்படாமல் தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்கும் சி.சி.டி.வி கேமரா முறையை தமிழகம் முழுவதும் கொண்டுவர வேண்டும். அதன்மூலம் வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, தாம்பரம் விபத்து ஏற்பட்டது எப்படி? காயமடைந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதா? என்பதை விசாரிக்க, விபத்தில் காயமடைந்த 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 1 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.