சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் ரவுடிகள், அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடிகளைக் கண்காணித்து அவர்களைக் கைதுசெய்ய உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவகுமார் (42) மீது மூன்று கொலை, பத்து கொலை முயற்சி உள்பட 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும் இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்ததால் இரண்டு முறை காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையிலும் அடைத்தனர்.
இதுமட்டுமில்லாமல் ரவுடி சிவகுமாரை மயிலாப்பூர் பகுதியிலே நுழையக்கூடாது எனக் காவல் துறையினர் இரண்டு முறை உத்தரவும் இட்டுள்ளனர்.
ஆனால் இதனை மீறி ரவுடி சிவகுமார் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று மயிலாப்பூர் பகுதியில் வசித்துவரும் குமாரி என்ற பெண்ணுடன் தகராறு செய்து அவரது வீட்டை எரித்துள்ளார்.
இந்த வழக்கில் நீண்ட நாள்களாக சிவகுமார் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மயிலாப்பூர் நடுத்தெருவில் பூ விற்பனை செய்துவரும் கோமதி என்ற பெண்ணிடம் ரவுடி சிவகுமார் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துவிட்டு தப்பியோடினார். இதனால் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய தனிப்படை காவல் துறையினர் உத்திரமேரூரில் பதுங்கியிருந்த சிவகுமாரை நேற்று மாலை கைதுசெய்தனர்.
இவரிடமிருந்து 2 கத்தி, 2 செல்போன்கள், 20 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். கைதுசெய்யப்பட்ட ரவுடி சிவகுமாரை மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்திவருகின்றனர்.