சென்னை: தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
திட்டத்தின் நோக்கம்
இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. உயர் ‘ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை இல்லங்களில் வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கள அளவிலான குழுவில், பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், நோய் ஆதரவுச் சிகிச்சை செவிலியர்கள், இயன்முறை மருத்துவர்கள், இடைநிலை சுகாதாரச் சேவையாளர்கள் ஆகியோர் இடம் பெறுவர். பொது சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்துவார்கள்.
எந்தப் பகுதியில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
முதல்கட்டமாக, 50 வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள், மாநிலத்தின் பிற கிராம மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் மக்களைச் சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படுகிறது.
திட்டத்தால் பயன் அடைந்தவர்கள்
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து நேற்றுவரை (ஆக.26) 98,089 உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கும் 63,718 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் 43,653 உயர் ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 6,940 நபர்களுக்கு சிகிச்சையும் 7,114 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளன.
இதை தவிர்த்து 31 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தினால் மொத்தம் 2,19,545 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக ரூ.317 கோடி ஒதுக்கீடு - ஸ்டாலின்