சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 263 என குறைந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 21 நபர்களுக்கு மட்டுமே கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலில், 'தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 20 ஆயிரத்து 18 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பைக் கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மேலும் 20 நபர்களுக்கும், சிங்கப்பூரிலிருந்து வந்த ஒருவருக்கும் என 21 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
31 மாவட்டங்களில் கரோனா இல்லை: தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 45 லட்சத்து 17 ஆயிரத்து 822 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 34 லட்சத்து 52 ஆயிரத்து 931 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 263 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணம் அடைந்த 33 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 643 என உயர்ந்துள்ளது.
12 மாவட்டங்களில் சிகிச்சை இல்லை: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 8 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 4 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் இரண்டு நபர்களுக்கும், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.
கரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் 121 பேரும், செங்கல்பட்டில் 23 நபர்களும், கோயம்புத்தூரில் 18 நபர்களும் காஞ்சிபுரத்தில் 13 நபர்களும், கன்னியாகுமரியில் பத்து நபர்களும், திருவள்ளூரில் 12 நபர்களும், வேலூரில் 11 நபர்களும் என அதிக அளவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 12 மாவட்டங்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் சிகிச்சை பெற வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாட்டில் 715 நாள்களுக்கு பின் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு