தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சென்னை, கோடம்பாக்கம், கணபதி அரசு பதிப்புச் செம்மல் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நாகராஜ முருகன் விண்ணப்பங்கள் வழங்கி மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அப்போது கரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை, பருப்பு உள்ளிட்ட 14 வகையான பொருள்களை அவர் வழங்கினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள், புத்தகப்பை, செருப்பு உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன.
இதுகுறித்து கோடம்பாக்கம் கணபதி அரசு பள்ளிகள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பேசுகையில், ''அரசு அறிவித்த வழிகாட்டுதலின்படி மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளோம். எங்கள் பள்ளியில் ஏற்கனவே ஆயிரத்து 500 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் மாணவர்களை சேர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் வகையில் பருப்பு, எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பொருள்களை நிவாரணமாக வழங்குகிறோம். மாணவர் சேர்க்கை தனி மனித இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது.
எங்கள் பள்ளியில் தனியார் பள்ளியை விடவும் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நாளை மதுக்கடைகள் திறப்பு