சென்னை: திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வழக்கறிஞர் அம்பிகை தாஸ் (வயது 49). இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் கவுரவ சட்டப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் பல்வேறு சட்ட புத்தகங்களும் எழுதியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு இவர் திருவொற்றியூர் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வந்துவிட்டு திரும்பி செல்லும்போது, இரண்டு இளைஞர்கள் இவரை கடுமையாக தலையில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
திருவொற்றியூர் கேவிகே குப்பத்தை சேர்ந்த ஜேம்ஸ் மற்றும் ராகுல் என்ற இளைஞர்களை வஉசி நகரை சேர்ந்த சுதர்சன் என்பவர் அழைத்து வந்து, எனது குடும்ப பிரச்சினையில் இந்த வழக்கறிஞர் தலையிடுவதால் இவரை அடியுங்கள் என கூறியதாகவும், அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் அம்பிகை தாஸை தாக்கியதும் தெரியவந்தது.
உடனடியாக ஜேம்ஸ், ராகுல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சுதர்சனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
வழக்கறிஞரை தாக்கியதால் குற்றவாளிகளுக்கு வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.