சென்னை: சென்னை அயனாவரம், நாகூர் நகர் மூன்றாவது தெருவைச்சேர்ந்தவர், நிர்மலா(58). இவர் பாஜகவின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணித்தலைவியாகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் மற்றும் பிரவீன் குமார் என இரண்டு மகன்கள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மகளிர் அணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள நிர்மலா சென்ற நிலையில், அவரது இரண்டு மகன்களும் இருசக்கர வாகனத்தில் ஆர்ப்பாட்டத்திற்குச்சென்றுள்ளனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு நிர்மலா அவரது தோழிகளுடன் பேருந்தில் வீட்டிற்குச்சென்றுள்ளார்.
நிர்மலாவின் மகன்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வருவதாகக்கூறியுள்ளனர். இந்நிலையில் இரவு வெகு நேரம் ஆகியும் இருவரும் வீட்டிற்கு வராததால் தொலைபேசி தொடர்புகொண்டு பேசியபோது, அயனாவரம் ஐசிஎப் மைதானத்தில் இருப்பதாகவும் சீக்கிரமாக வீட்டிற்கு வருவதாகவும் இருவரும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் இரவு 11 மணி அளவில் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது இருவருடைய தொலைபேசி எண்ணும் சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது குறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, புகாரியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நேற்று(நவ.1) மாலை நிர்மலா மற்றும் அவரது இரண்டு மகன்களும் ஆர்ப்பாட்டத்திற்குச்சென்ற நிலையில், ஆறு நபர்கள் நிர்மலாவின் வீட்டிற்குச்சென்று நிர்மலா எங்கே என கேட்டுச்சென்றுள்ளனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகளைக்கைப்பற்றி அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வயிற்று வலிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமி உயிரிழப்பு: மருத்துவமனையை முற்றுகையிட்ட பெற்றோர்