சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ராஜாஜி நகர் கிராம நிர்வாக அலுவலர் வீரகுமாரின் உதவியாளர் சங்கர் ராஜ் (47). பல்லாவரம் ஜோதி நகரை சேர்ந்த இவர், பெருங்களத்தூர் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் பின்புறத்தில் உள்ள அரசுப் பள்ளியின் காலி மைதானத்தில் நடைபயிற்சிக்காக இன்று (செப்டம்பர் 2) மாலை சென்றார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அப்பகுதிக்குச் சென்று பார்த்த கிராம நிர்வாக அலுவலர், சட்டை கிழிந்த நிலையில் சங்கர் ராஜ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பீர்க்கங்கரணை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வீரகுமார், சேலையூர் சரக காவல் உதவி ஆணையர் சகாதேவனிடம் இறப்புக்கான காரணம் என்னவென்று விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என புகார் அளித்தார். மேலும், உதவி ஆணையர் வழக்குப் பதிவு செய்து சட்டை கிழிந்த நிலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததால் யாராவது கொலை செய்திருக்கலாம் என்று விசாரணையை தொடங்கினர்.
அப்பகுதிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சிசிடிவி கேமராவில் மூன்று பேர் கொண்ட கும்பல் நடந்துச் செல்வது பதிவாகியிருந்தது. சிசிடிவி கேமராவில் முகம் தெளிவாக தெரியாததால் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில், பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் (29) அப்பு என்கிற காலி(30) என்ற இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.