அடுத்தடுத்த இரு நாள்களில் இரு திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் உடல்நலக்குறைவால் காலமானது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி நேற்று உயிரிழந்த நிலையில், சென்னை அப்பலோவில் இதய நோய் சிகிச்சைப் பெற்றுவந்த குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் இன்று காலை காலமானார்.
இந்த சம்பவம் கட்சியினரிடையே கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. இரண்டு எம்எல்ஏக்களை இழந்ததால், திமுகவின் பலம் சட்டப்பேரவையில் 98ஆக குறைந்துள்ளது. காத்தவராயன் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவர்.
திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவந்த 58 வயதேயான காத்தவராயன், இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றவராவார். திமுகவின் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராகவும், வேலூர் மத்திய மாவட்ட துணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் அக்கட்சி பல பிரிவுகளாக உடைந்தது. நீண்ட பிரச்னைகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். அவர் முதலமைச்சரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் தலைமையில் 18 அதிமுக உறுப்பினர்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். அதற்காக சபாநாயகர் 18 பேரையும் தகுதிநீக்கம் செய்தார். நீதிமன்ற தீர்ப்பும் 18 பேருக்கு எதிராக வந்ததால், அவர்கள் தங்களது பதவியை இழந்தனர்.
காலியான 18 தொகுதிகளுக்கு கடந்தாண்டு ஏப்ரல் மாதமும், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் தேர்தல் நடத்தப்பட்டது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையற்ற கட்சியாக அதிமுக இருந்த நிலையில், ஆட்சியைத் தக்கவைக்கும் தேர்தலாக 22 தொகுதி இடைத்தேர்தல் அமைந்தது.
22 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வென்று எடப்பாடி ஆட்சியைத் தக்கவைத்தார். திமுக 13 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதன்மூலம், திமுகவின் பலம் 102ஆக உயர்ந்தது. 13 தொகுதிகளில் ஒரு தொகுதிதான் காத்தவராயன் வெற்றிபெற்ற குடியாத்தம். தற்போது அந்தத் தொகுதி காலியாகியுள்ளது. இதனிடையே, நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக தோற்றதால், பேரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 100ஆக குறைந்தது. தற்போது இவ்விருவரின் இழப்புக்குப் பிறகு 98ஆக குறைந்துள்ளது. அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 125ஆக உள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் (மொத்தம் - 234) விவரம்:
அதிமுக - 125
திமுக - 98
காங்கிரஸ் - 7
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் - 1
சுயேச்சை - 1
காலியான இடங்கள் - 2
இரண்டு உறுப்பினர்கள் இறந்ததையடுத்து, திமுக எம்பிக்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்டாலின் மார்ச் 1இல் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என கட்சியினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது ஒருபுறம் என்றால், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு அடுத்தப்படியாக மக்கள் செல்வாக்கு பெற்ற மூத்தத் தலைவர் பேராசிரியர் அன்பழகனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் உடன்பிறப்புகளை மேலும் கலக்கமடையச் செய்துள்ளது.