தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் சம்பந்தி இளங்கோவன் என்பவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் கடந்த 27ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.
அதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இளங்கோவனுக்குச் சொந்தமான நிதி நிறுவனங்களிலும் சோதனை விரிவடைந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை தியாகராயநகரில் டி.என்.சி. சிட்பண்ட் கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் முதல் நாள் ஆறு கோடி ரூபாய் சிக்கியுள்ளதாக வருமானவரித் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
இரண்டாவது நாள் நடந்த சோதனையில் மேலும் மூன்று கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது. மூன்றாவது நாள் இன்று (மார்ச் 29) அதிகாலை முடிவடைந்த நிலையில் மேலும் இரண்டு கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மொத்தமாக 11 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல்செய்துள்ளனர். மேலும் வங்கிக் கணக்குகளையும் அலுவலர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.
மின்னணு ஆவணங்களை ஆய்வுசெய்ததில்,கணக்கில் வராத வருமானம் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இளங்கோவன், நிர்வாகிகளுக்கு அழைப்பாணை அனுப்பி விசாரிக்கவும் முடிவுசெய்துள்ளனர்.
யார் இந்த இளங்கோவன்?
தொழிலதிபரும், டி.என்.சி. நிறுவனருமான இளங்கோவனுக்கு தருமபுரி, ஒசூர் பகுதிகளில் சொந்தமாக கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும், டி.என்.சி. சிட்பண்ட் என்று சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட கிளைகள் நடத்திவருகிறார்.
தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் முக்கியப் பதவியிலும் தனியார் பள்ளி கூட்டமைப்பு மாநிலச் செயலாளராகவும் இளங்கோவன் பதவி வகித்துவருகிறார்.