சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூருக்குச் செல்லும் விமானத்தில் போதிய பயணிகள் இல்லாததால் இன்று (செப்.29) சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லவிருந்த இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, இன்று (செப்.29) கர்நாடக மாநிலத்தில் சில அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதையடுத்து சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. எனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லவிருந்த இரண்டு விமானங்களை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாகம் ரத்து செய்தது.
இன்று காலை 11:35 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் புறப்பட்டு, பகல் 12:35 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதைப்போல் இன்று பிற்பகல் 2:10 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3:10 மணிக்கு பெங்களூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஆகிய இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதையும் படிங்க: கர்நாடக பந்த்: தமிழக எல்லை வரை மட்டுமே போக்குவரத்து இயக்கம்.. பயணிகள் அவதி!
இந்த இரு விமானங்களில் முன் பதிவு செய்திருந்த குறைந்த அளவு பயணிகளின் டிக்கெட்டுகள், வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டன. இந்த இரண்டு விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் இன்று ரத்து செய்யப்பட்டாலும், சென்னை பெங்களூரு இடையே இன்று இயக்கப்படும் 8 விமானங்கள், அதைப்போல் பெங்களூரு சென்னை இடையே இயக்கப்படும் 8 விமானங்கள் என மொத்தம் 16 விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "வாரிசு அடிப்படையில் பணி ஆணை பெற்றவர்கள் மீது வன்மத்தை காட்டக்கூடாது" - அதிகாரிகளை எச்சரித்த நீதிபதி!