சென்னை : தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 50 ஆயிரத்து 113 நபர்களுக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் 195 நபர்களுக்கும், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 196 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 35 லட்சத்து 36 ஆயிரத்து 149 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 51 ஆயிரத்து 13 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறிய முடிந்தது. இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 2,770 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் 554 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 10 ஆயிரத்து 228 என உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் ஒரு நோயாளியும் அரசு மருத்துவமனையில் 2 நோயாளிகளும் என 3 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 15 என உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 62 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 25 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 20 நபர்களுக்கும் நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பெரும்பாலான மாவட்டங்களில் பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. சில மாவட்டங்களில் புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை.
இதையும் படிங்க : உக்ரைனில் 35 மாணவர்களின் போக்குவரத்துக்கான கட்டணத்தை செலுத்திய தமிழ்நாடு அரசு