சென்னை எஸ்.எம்.பி கோயில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் தனது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 18 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்றதாக கடந்த நவம்பர் 15ஆம் தேதியன்று ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் ராயப்பேட்டை உதவி ஆணையர் பாஸ்கரின் உத்தரவின்பேரில், ஆய்வாளர் ஜோதிலட்சுமி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில், வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமாரவை ஆய்வுசெய்து பார்த்தபோது அதில் பதிவான காட்சி கொள்ளையனை அடையாளம் காட்டிக்கொடுத்தது.
சிசிடிவி காட்சியை வைத்து ரவுடி பிரகாஷ் என்பவர் கொள்ளையடித்துச் சென்றதை காவல் துறையினர் கண்டறிந்தனர். இதனையடுத்து அவரைக் கைதுசெய்து அவரிடமிருந்து 18 சவரன் தங்க நகைகளை மீட்டனர். பிரகாஷ் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், பிரகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், அவரை புழல் சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: காவல் துறையினரை தாக்கிய நபர்கள் - சிசிடிவி காட்சி!