சென்னை: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழி செய்யும் சட்டத் திருத்த மசோதா கடந்த 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இருந்தபோதும், கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதா பேரவையில் நிறைவேறியது. இந்த சட்டத்திருத்த மசோதா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா உள்பட 17 மசோதாக்கள், சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பும் முன்பாக, அவற்றை திரும்பப் பெற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. 12 மணி நேர வேலை மசோதாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அச்சட்டத்தின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே 12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று இரவுக்குள் தகவல் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.