சென்னை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்றது.
கரோனா பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கூட்டத்தை, மரபுமுறைப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி தொடங்கி வைத்தார்.
ஆளுநர் தனது உரையில், நீட், வேளாண் சட்டங்களை ரத்துசெய்தல், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை, இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை, நிதித் துறை வல்லுநர்கள் அடங்கிய குழு, 15 நாள்களில் ஸ்மார்ட் கார்டு எனப் பல்வேறு முக்கிய அம்சங்களை அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தந்தை பெரியாரின் சமூக நீதி, சமத்துவத்தை அடித்தளமாகக் கொண்டு இந்த அரசு செயல்படும்" என்றார்.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவைத் தலைவர் அப்பாவு, "சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்றும் நாளையும் நடைபெறும். வரும் 24ஆம் தேதி முதலமைச்சர் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றுவார்.
மேலும், இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும் அண்மையில் மறைந்த முக்கிய நபர்களான நடிகர் விவேக், கி.ராஜநாராயணன், துளசி அய்யா, டி.எம்.காளியண்ணன் உள்ளிட்ட 11 நபர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். கேள்வி பதில் நேரம், கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்டவை இந்த கூட்டத்தொடரில் இல்லை. சட்ட முன்வடிவு ஒன்று, இரண்டு வரலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனை குழு குறித்த அறிமுகம்