சென்னை: கடந்த 2020ஆம் ஆண்டு கோவையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனை, ஆர்.எம்.கே.வி சில்க்ஸ், லலிதா ஜுவல்லரி, திருச்சி பதஞ்சலி சில்க்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களில் போலியான ஆவணங்களைக் கொடுத்து ஒரு நபர் நிதிப் பிரிவில் பணியாற்றி வந்ததாகவும், அதன் பிறகு நான்கு நிறுவனங்களிலிருந்தும் மொத்தம் ரூ.16 லட்சம் வரை திருடி விட்டுத் தப்பிச் சென்றதாகக் கடையின் உரிமையாளர்கள் கோயம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, கோவை காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த நபரின் புகைப்படத்தை வைத்துக் கடந்த ஒன்றரை வருடங்களாகத் தேடி வந்துள்ளனர். மேலும் அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தீவிரமாக விசாரணை செய்ததில், சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தங்கி வருவதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் உடனடியாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயனுக்கு கோவை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தகவலின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் தனிப்படை காவல்துறையினர் கிண்டியில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த, அந்த திருடனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் சுவாரசிய தகவல் வெளியானது.
அந்நபர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பதும், இவன் என்ஜினீயரிங் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. மேலும், யுவராஜ் சொகுசு வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு, பல நிறுவனங்களில் லட்சக்கணக்கில் திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக யுவராஜ் பல பெயர்களில் போலி ஆவணங்களைத் தயாரித்து ஜவுளிக்கடைகளைக் குறிவைத்து நிதி பிரிவில் பணிக்குச் சேர்வார், பின்னர், பணம் இருக்கக்கூடிய இடத்தை அறிந்து லட்சக்கணக்கில் திருடிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பதாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், பணியாற்றும் இடங்களிலெல்லாம் பெண்களைக் காதலிப்பது போல் ஏமாற்றி உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக வைத்து இருப்பதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் திருடிய பணத்தில் சொகுசு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை யுவராஜ் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு கோவை கேஎம்சிஎச் என்ற தனியார் நிறுவனத்தில் போலி ஆவணங்களைக் காண்பித்து பணியில் சேர்ந்து ரூ.85 லட்சம் பணத்தை லாக்கரில் இருந்து திருடிவிட்டு யுவராஜ் தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது. அதன் பிறகு மேட்ரிமோனியில் ஒரு பெண்ணுடன் பழகி அதன் காரணமாகச் சென்னை கிண்டியில் சொகுசு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட யுவராஜை சென்னை காவல்துறையினர் கோவை மாநகர காவல் துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
இதையும் படிங்க:மகள் காதல் திருமணம் - இரு மகள்கள், மனைவியை கொன்று தந்தை தற்கொலை