சென்னை: தலைமைச் செயலகத்தில் மார்ச் 29ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை சட்டசபையில் கால்நடை பராமரிப்புத்துறைக்கான மானிய கோரிக்கையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
1. நான்கு துறை சார்ந்த பண்ணைகளில் புதிதாக விவசாயிகள் தகவல் மையம் மற்றும் மாதிரி செயல் விளக்க ஒருங்கிணைந்த பண்ணை கண்காணிப்பு அலுவலகங்கள் 14 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
2. ஐந்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் 20 கால்நடை மருந்தகங்களுக்கு பதினாறு கோடியே 30 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
3. ஐந்து பண்ணைகளில் பயிரிடப்படாத 220 ஏக்கர் நிலப்பரப்பில் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பின் மூலம் அதிக மகசூல் தரும் பசு தீவனங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நியாயமான விலையில் கிடைக்க வழி வகை செய்யப்படும்.
4. பால் உற்பத்தியை பெருக்குவதற்காக பாலினம் பிரிக்கப்பட்ட உறை விந்து குச்சிகளை பயன்படுத்தி மூன்று ஆண்டுகளில் 2.14 லட்சம் கிடேரிக் கன்றுகள் 16 கிடைக்க வழிவகை செய்யப்படும்.
5. அனைத்து கால்நடைகளுக்கும் நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள் மூலம் கிராமங்கள் தோறும் கால்நடைகளை காக்க உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக 73 ஆயிரத்து 500 முகாம்கள் நடத்தப்படும்.
6. ஊராட்சி ஒன்றிய தலைமை இட கால்நடை மருத்துவ நிலையங்களில் நோய் கண்டறியும் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 20 கோடி செலவில் 50 கையடக்க நுண்ணலை நுண்ணாய்வு மற்றும் எக்ஸ்ரே கதிர்வீச்சு கருவிகள் வழங்கப்படும்.
7. உள்நாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு மையம் சென்னையில் 5.95கோடி செலவில் விரிவாக்கப்படும்.
8. ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கான இணைய முகப்பு 87 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
9. நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராம பயனர்களுக்கு சிறிய அளவிலான நூறு நாட்டு கோழி பண்ணை அலகுகள் 50 சதவீத மானியத்தில் ஒரு கோடியே 80 லட்சம் செலவில் வழங்கப்படும்.
10. சுய உதவி குழுவினருக்கு வேலைவாய்ப்பினை வழங்கி 25 ஏக்கர் மெய் கால் நிலங்களில் 2.33 கோடி செலவில் அதிக மகசூல் தரும் பசுந்தீவன புல் வகைகள் உற்பத்தி செய்யப்படும்.
11. தீவன விரயத்தை குறைப்பதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் 3000 புல் நறுக்கும் கருவிகள் 4 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
12. கால்நடைகளின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக துறை சார்ந்த பண்ணைகளில் உயர் மரபுத்திறன் கொண்ட புதிய கால்நடைகளை அறிமுகம் செய்யும் பொருட்டு 2490 கால்நடைகள் இரண்டு கோடியே 61 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.
இதையும் படிங்க: ரூ.15 கோடியை செலுத்த வேண்டும்.. நடிகர் விஷாலுக்கு புதிய சிக்கல்.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு என்ன?