சென்னை: சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு கருத்துக்கள் பரப்புவது, பெண்கள் குறித்து இழிவாக பேசுவது, சாதி மோதலை ஏற்படுத்துவது, அரசியல் கட்சியினரை அவதூறாக சித்தரித்து கருத்துக்கள் பதிவிடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் தமிழ்நாடு காவல் துறையினர், அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜி.பி. முத்து மீது புகார்:
குறிப்பாக பெண்களை இழிவுப்படுத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில் பப்ஜி மதன், சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் குறித்து இழிவாக பதிவிடுவதாக வந்த புகாரில் கிஷோர் கே.ஸ்வாமி, உள்ளிட்ட பலரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தங்களை டிக் டாக் பிரபலங்கள் எனக் கூறிக்கொள்ளும் ஜி.பி முத்து, ரவுடி பேபி, இலக்கியா ஆகியோரின் யூடியூப் சேனலை முடக்கக்கோரி பல தரப்பினரிடமிருந்தும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவதூறான வகையில் வீடியோ பதிவு செய்தவர்கள் கைது:
இந்நிலையில் மத மோதலை ஏற்படுத்தும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கடந்த மே மாதம் முதல் இன்று வரை 75 வழக்குகளை தமிழ்நாடு காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்குகளில் அவதூறான வகையில் வீடியோவை பதிவிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் உள்ளதா என்பதை விசாரித்த பிறகே நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: லோன் மோசடி வழக்கு: பதில் புகாரளித்த ஆர்.கே. சுரேஷ்