சென்னை: பிரபல ஆர்ஜேவாக இருந்து, திரையுலகில் நுழைந்து, தற்போது முன்னணி நடிகர் மற்றும் இயக்குநராக மாறியுள்ளவர் ஆர்.ஜே.பாலாஜி. முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த 'தீயா வேலை செய்யனும் குமாரு' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், எல்.கே.ஜி என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக உருவெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் கதை நாயகனாக நடித்து குறிப்பிடும் நடிகராக முன்னேறியவர், தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள 'சொர்க்க வாசல்' திரைப்படம் நாளை (நவ.29) திரைக்கு வருகிறது. இப்படத்தில் சிறைக் கைதியாக ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார். இப்படம் 1999ஆம் ஆண்டு சென்னை புழல் சிறையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் கதை தன்னுடையது என்று கிருஷ்ணா என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணா என்பவர் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நான் கிளைச்சிறை என்ற தலைப்பில் எழுதிய கதையை மாற்றி தற்போது சொர்க்க வாசல் என எடுத்துள்ளனர். இதன் டிசெய்லரை பார்த்த போது முழுக்க முழுக்க எனது கிளைச் சிறை கதையை அப்படியே எடுத்துள்ளனர் என தெரியவந்தது.
2018இல் தான் இந்த கதையை நான் எழுதினேன். 2022இல் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நடத்திய ஆன்லைன் மீட்டிங்கில் நான் பணம் செலுத்தி கலந்து கொண்டேன். அப்போது எல்லோருடைய கதைச் சுருக்கம் அனுப்புமாறு ஒரு மின்னஞ்சல் கொடுத்தனர். அந்த மின்னஞ்சலுக்கு எனது கதை சுருக்கத்தை அனுப்பினேன். அப்போது எனக்கு பதில் எதுவும் வரவில்லை. சில நாட்கள் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் அலுவலகத்தில் இருந்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கதையை கூறச் சொன்னார்கள், நானும் கூறினேன்.
இதையும் படிங்க: மழையால் பள்ளி, கல்லூரி விடுமுறையா?... வீக்கெண்ட் பொழுது போக்க புதிய திரைப்படங்கள் ரிலீஸ் என்ன தெரியுமா?
சில நாட்கள் கழித்து உங்கள் கதை ஏற்கப்படவில்லை என்று மின்னஞ்சல் வந்தது. தற்போது 'சொர்க்க வாசல்' என்ற பெயரில் எனது கதை வந்துள்ளது. இதுகுறித்து ஆர்.ஜே பாலாஜியை தொடர்பு கொள்ள முயன்ற போதும் முடியவில்லை” என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். சொர்க்க வாசல் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தின் கதை என்னுடையது என ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்