சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏபிஜெ அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஷேக் தாவுத், “ஸ்பேஸ் சோன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஆனந்த் மேகலிங்கம் , அப்துல் கலாம் மாணவர் செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட் வடிவமைப்பு திட்டத்தின்கீழ் 5 ஆயிரம் பள்ளி மாணவர்கள் சிறிய வடிவிலான உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 150 சிறிய ரக செயற்கோள்கள் வரும் 19ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 6 கி.மீ., தூரத்தில் செலுத்தப்பட்டு பின்னர் , மீண்டும் 8 நிமிடங்களில் பாராசூட் உதவியுடன் செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட் பூமிக்கு திரும்ப கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வடிவமைத்த செயற்கைக்கோள் உதவியுடன் காற்றின் வேகம், காற்று மாசு, ஆக்சிஜன் அளவு, ஈரப்பதம், ஓசோனின் தன்மை உள்ளிட்ட 150 காரணிகள் குறித்து செயற்கைகோள்கள் பதிவு செய்யும். இந்தத் தகவல்கள் மாணவர்களுக்கு அளிக்கப்படும். பள்ளி மாணவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கான 85 விழுக்காடு நிதியை மார்ட்டின் நிறுவனம் அளித்துள்ளது.
இந்தியா முழுவதும் இருந்து 5ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இந்த செயற்கைக்கோள் 2.5 கோடி ரூபாய் செலவில் இந்தியாவில் முழுவதும் தயார் செய்யப்பட்டது. செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுவதை மாணவர்கள் நேரடியாக பார்க்கலாம். 65 கிலோ எடையில் ராக்கெட் தயார் செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் இடத்தில் ராக்கெட் தற்காலிக ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
காற்று வீசும் திசையின் வேகம், ஈரப்பதம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் ராக்கெட் ஏவுவதற்கான நேரம் முடிவு செய்யப்பட்டு, 6 கிலோ மீட்டர் சென்ற உடன் மீண்டும் பாராசூட் உதவியுடன் தரையில் இறக்கப்படும். இதன் மூலம் பெறப்படும் தகவல்களை அரசிற்கும் அளிக்க உள்ளோம். இந்தச் செயற்கைக்கோள்களை பாராசூட் உதவியுடன் இறக்குவதால் மீண்டும் பயன்படுத்த முடியும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கோவையில் கல்லூரி மாணவர்கள் வட மாநில தொழிலாளர்கள் இடையே மோதல்!