சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் ஒமைக்ரான் பிஏ 4,பிஏ 5 பரவலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியுள்ளது. நோய்த்தொற்று அதிகரித்தாலும் புதிதாக யாரும் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஜூன் 7ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலின்படி, ’தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 10 ஆயிரத்து 743 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் துருக்கி நாட்டிலிருந்து வந்த நான்கு பேருக்கும் சிங்கப்பூரிலிருந்து வந்த ஒருவருக்கும் ஜார்கண்டில் இருந்து வந்த ஒருவருக்கும், தமிழ்நாட்டில் இருந்த 138 பேர் உட்பட 144 பேருக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 55 லட்சத்து 39 ஆயிரத்து 508 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 56 ஆயிரத்து 317 பேர் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகிருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 927 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மற்றும் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 79 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 17 ஆயிரத்து 365 என உயர்ந்துள்ளது.
மேலும் சென்னையில் புதிதாக 82 நபர்களுக்கும் செங்கல்பட்டில் 29 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் ஏழு நபர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 நபர்களுக்கும், வேலூர், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும் , ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும், விமானம் மூலம் வந்த 5 நபர்களுக்கும் என 144 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 55 நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்’ என பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: உலக புகையிலை எதிர்ப்பு தினம்: புகையிலைப் பயன்படுத்துவதால் 'இந்த' பாதிப்பும் வருகிறதாம்..!