சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான 14 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். சென்னையின் சௌகார்பேட்டை ஆடியப்பா தெருவில் யானை கவுனி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது, இரண்டு பைகள் முழுவதுமாக தங்க நகைகள் இருந்துள்ளது.
இந்த நகைகளுக்கான ஆவணங்கள் கேட்டு விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நகைகளை கொண்டு வந்த நபர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த சிகந்தர் சாந்த்ராம் சிக்வன்(39) மற்றும் முகேஷ் பாவர்லால் ஜெயின்(49) என்பது தெரியவந்தது.
இவர்கள் மும்பையில் உள்ள நகைக்கடை ஒன்றில் எந்தவித ரசீதும் இல்லாமல் வளையல், மோதிரம் உள்ளிட்ட 14 கிலோ தங்க நகைகளை வாங்கிவந்து, சௌகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள நகைக்கடைகளில் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால் நகைகளுடன் இருவரையும் வருமான வரித்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். இவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கொண்டு வந்த 14 கிலோ தங்க நகைகளின் மதிப்பு 7 கோடி ரூபாயாகும்.
இதையும் படிங்க: துணிவு பட பாணியில் பட்டப்பகலில் வங்கி கொள்ளை முயற்சி.. திண்டுக்கல் இளைஞரை கைது செய்த காவல்துறை!