சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "கரோனா பரிசோதனைகள் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் அதிகளவில் மேற்கொள்ளபட்டுள்ளன. அதே போல், இனிவரும் காலங்களிலும் சோதனைகளின் எண்ணிக்கை குறையாது. நாளை முதல் பணி செய்யும் இடங்களில் அதிகளவில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளோம். அதே போல், மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை வந்தால் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் வரும் நபர்கள் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அறிகுறி இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்யப்படும். தளர்வு அறிவிப்பால் நோய் தொற்று குறைந்தது என்ற எண்ணத்திற்கு வர வேண்டாம். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு அரசு கூறும் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும். தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். தற்போது உறுதி செய்யப்படுபவர்களின் விழுக்காடு 9ஆக உள்ளது. (100 நபர்களுக்கு பரிசோதனை செய்தால் 9 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது) அதை 5ஆக குறைப்பதே நோக்கம். மக்களின் நன்மைகாக மட்டும்தான் சோதனையானது மேற்கொள்ளப்படுகிறது. அவர்களை தொந்தரவு செய்யும் நோக்கில் அல்ல. இனிமேல் வீட்டில் தகரம் அடிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படாது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "முகக்கவசம் மற்றும் தகுந்த இடைவெளியை பின்பற்றாத கடைக்கு 14 நாட்களுக்கு சீல் வைக்கபடும். அதே போல், ஆட்டோவிலும் அரசு விதிமுறையை பின்பற்றவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் அல்லது ஆட்டோ பறிமுதல் செய்யப்படும். பேரிடர் மேலாண்மை மற்றும் வல்லுனர்களின் ஆலோசனை அடிப்படையில் தான் கடற்கரை திறக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்ற விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.