தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான மொழித்தாள் தேர்வு இன்று நடைபெற்றது. மொழித்தாள் தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதில் தமிழ் வழியில் பயின்ற நான்கு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
காலை 10:15 மணிக்குத் தொடங்கிய தேர்வு மதியம் 1:15 மணிக்கு முடிவுற்றது. தேர்வினை முடித்துவிட்டு வெளியில் வந்த மாணவிகள் மிகவும் மகிழ்ச்சி பொங்கிய முகத்துடன் காணப்பட்டனர்.தேர்வு குறித்து மாணவிகள் கூறும்போது, ”பொதுத்தேர்வில் ப்ளுபிரிண்ட் இல்லாமல் தேர்வு எழுதும்போது அச்சமாக இருந்தது. பாடப்புத்தகம் முழுவதையும் படிக்க வேண்டியிருந்தது.
தேர்வுக்குச் செல்வதற்கு முன்னர் எப்படி தேர்வெழுதப் போகிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் தேர்வறையில் வினாத்தாளை வாங்கிப் பார்த்த பின்னர் கேள்விகள் எளிதாக இருந்ததால், அந்தப் பயம் விலகியது. தமிழ் பாடத் தேர்வில் எழுத்துப்பிழைகள் எதுவும் இல்லாமல் எளிமையாக இருந்தது” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து