சென்னை: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிவரும் தகவலால் அரசியல் கட்சியினர் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். முதலில் அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைப்பதற்காக அனுமதிக்கப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
அதற்கு அடுத்து சென்னையில் நடைபெற்ற தனியார் கல்லூரியில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கரோனா காலத்தில் பாதிப்பை சரி செய்யும் வகையில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்பதற்காகவே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதித்தோம். அதனால் இரண்டு, மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்குக்கூட தேர்வு எழுதுவதற்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.
இது பெரும் புயலைக் கிளப்பிய நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் 75% பள்ளிக்கு வரும் மாணவர்கள் மட்டுமே பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என மீண்டும் கூறினார், அன்பில் மகேஷ். இந்த நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வராததற்கு அவர்கள் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ்கள் தராமல் இருக்கிறது எனவும் புதிதாக ஒரு சர்ச்சை பேச்சினை தெரிவித்தார்.
இந்த நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத வராத பல மாணவர்கள், ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது புதிய கதை! அப்படியானால், மாற்றுச் சான்றிதழ் (TC) பெறாமல் ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் எப்படி சேர்ந்தார்கள் என்பதற்கு விசாரணை நடத்த உத்தரவிடுமா தமிழக அரசு?.
அப்படி சேர்த்த கல்லூரிகள் தகுதி நீக்கம் செய்யப்படுமா? அவை அரசு கல்லூரிகளாக இருந்தால் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பீர்களா?, மேலும் அப்படி சேர்ந்த மாணவர்களின் பெயரில் அரசின் சலுகைகள் வழங்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டு, முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்வீர்களா?, அமைச்சர் பொன்முடிக்கு இப்படி ஒரு 'செக்' வைத்துவிட்டீர்களே அன்பில் மகேஷ்?'' எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13-ம் தேதி நடைபெற்ற மொழித்தாள் தேர்விற்கு பதிவு செய்த பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களில் 50,674 பேர் தேர்வு எழுத வருகை தரவில்லை. அதேபோல் ஆங்கிலம் தேர்வு எழுத சுமார் ஐம்பதாயிரம் மாணவர்கள் வரவில்லை. இந்த மாணவர்களை கண்டறிந்து துணைத்தேர்வு எழுதுவதற்கு நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட்.. உளவியல் நிபுணர் அபிலாஷா கூறும் பகீர் காரணங்கள்!