பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், "பெற்றோர்களின் விருப்பப்படி, 12ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளைத் தமிழ்நாடு அரசு ஒத்திவைத்துள்ளது. ஆனால், செய்முறைத் தேர்வுகள் கால அட்டவணைப்படி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 12ஆம் வகுப்புத் தேர்வுகள் மீண்டும் எப்பொழுது நடத்தப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டிருந்தால் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவதற்கு உதவியாக இருந்திருக்கும்.
மேலும் 12ஆம் வகுப்புத் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி செலுத்தியபின் தேர்வு நடத்தினால் பாதுகாப்பாக இருக்கும்" என்றார்.
தமிழ்நாடு தனியார் மெட்ரிகுலேஷன் நர்சரி பிரைமரி சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறுகையில், "தமிழ்நாட்டில் கரோனாவை முன்னிட்டு 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதேபோல், சிபிஎஸ்இ, ஐசிஎஸ் கல்வி வாரியமும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.
ஒன்று முதல் 11ஆம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாலும் மாணவர்களின் உயிரைக் கருத்தில்கொண்டும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
அதேசமயம் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு மதிப்பெண் மிகவும் அவசியம். எனவே கரோனா காலம் முடிந்தவுடன் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்தி மதிப்பெண் வழங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!