அமெரிக்கா, அபுதாபி, குவைத், சாா்ஜா, பக்ரைன், துபாய், ஓமன், கத்தாா், ஜெட்டா, இலங்கை ஆகிய நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியா்களில் ஆயிரத்து 212 பேர் மீட்கப்பட்டு, அரசின் வந்தே பாரத் மீட்பு விமானங்கள் மற்றும் தனியாா் மீட்பு விமானங்கள் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் பக்ரைனிலிருந்து கல்ப் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த 164 இந்தியர்கள் தனியார் ஏஜெண்டுகள் மூலம் வந்ததால், அவர்களுக்கு விமான நிலையத்தில் இலவச மருத்துவ பரிசோதனை, அரசின் இலவச தனிமைப்படுத்தும் இடங்கள் கிடையாது என்று அலுவலர்கள் கூறினர். ஆனால், அவர்களிடம் ஏஜெண்டுகள் பக்ரைனிலேயே விடுதிக்கும், மருத்துவ பரிசோதனைக்கும் பணம் வசூலித்து ஏமாற்றிவிட்டதாக தெரியவந்தது. இதனால் பயணிகள் ஆத்திரமடைந்து அலுவலர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.
தங்களை ஏமாற்றிய ஏஜெண்டகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை நாங்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லமாட்டோம் என்று பயணிகள் திடீரென போராட்டம் நடத்தினர். இதையடுத்து, ஏஜெண்டுகள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். அதன்பின் அவர்களுக்கு விமான நிலையத்திலேயே இலவச மருத்துவ பரிசோதனைகள் நடத்தி 115 பேரை அரசின் இலவச தங்குமிடங்களுக்கும், 49 பேரை விடுதிக்கும் அனுப்பிவைத்தனர்.
அதேபோல் அமெரிக்காவின் சிக்காகோ நகரிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த 93 இந்தியர்களில், 40 பயணிகளின் உடமைகள் வரவில்லை. டெல்லி விமான நிலையத்தில் தவறுதலாக இறக்கப்பட்டுவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பயணிகள் ஏர் இந்தியா கவுண்டரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், உடமைகளை நாளைக்குள் அவரவர் இடங்களுக்கே கொண்டுவந்து கொடுப்பதாக அலுவலர்கள் உறுதியளித்தனர்.