தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கொள்ளை மற்றும் வழிப்பறி அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் தான், வெங்கடேசன் என்பவர், இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அரூர் 7வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெயலட்சுமியின் கணவர் வெங்கடேசன், நான்கு ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கியில் அடமானம் வைத்திருந்த 12 சவரன் நகையை இன்று (ஏப்ரல் 24) மீட்டார்.
வங்கியில் இருந்து மீட்ட நகை, ரூ.50,000-ஐ பையில் வைத்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் தனது நண்பரின் கடைக்கு முன், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றார்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் இரண்டு பேர், பைக்கை நோட்டமிட்டனர். மர்ம நபர் ஒருவர் செல்போனில் பேசுவது போல் பைக்கின் அருகே நின்று கொண்டிருந்தார். மற்றொரு நபர், இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த நகை, பணத்தைத் திருடினார். பின்னர் அந்த வழியாக பைக்கில் வந்த நபருடன் அவர் தப்பினார். செல்போனில் பேசியபடி நின்று கொண்டிருந்த நபரும், அங்கிருந்து நகர்ந்தார்.
இதற்கிடையே வெங்கடேசன் வெளியே வந்த நிலையில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இக்கொள்ளை சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், விசாரணை நடத்தினர். மேலும், சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு; கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!