21 மாத நிலுவைத் தொகையை அளிக்க வேண்டும், புதிய ஒய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இவர்களை கைது செய்த போலீசார், கடந்த 24ம் தேதி, மாலை விடுவித்தனர். ஆனால், அதை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் கைது செய்யப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக 25,28,29 உள்ளிட்ட தேதிகளில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதும் காவல்துறை வழக்க பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், கடந்த 29-ம் தேதி மாலை 7 மணி வரை பணியில் சேராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதன்படி பணிக்கு திரும்பாத ஆசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்லவித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் பள்ளிக்கல்விதுறையில் பணியாற்றிய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதால் அவர்கள் 534 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல் கடந்த 30-ம் தேதி வரை பணிக்கு வராமல் இருந்த 75 பேரிடமும் விளக்கம் கேட்கப்பட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்து தொடக்கக் கல்வித்துறையில் 577 பேர் கைது செய்யப்பட்டதன் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.