தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவை தேர்தலைக் கண்காணிக்க 118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை தமிழ்நாடு வருகின்றனர் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு, '150 பொது பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள் 19ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ளனர். தற்போது வரை தமிழ்நாட்டில் 65 கம்பெணி துணை ராணுவப்படை வந்துள்ளது என்று தெரிவித்தார்.
ஆன்லைன் வேட்புமனு
ஆன்லைன் மூலமாக வேட்புமனு விண்ணப்பம் பெறலாம் என்றும், அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரில் வேட்பு மணு தாக்கல் செய்ய இரண்டு பேர் மட்டுமே வேட்பாளருடன் செல்லலாம். வேட்புமனு தாக்கலின்போது இரண்டு வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும். வேட்புமனு காலை 11 மணியில் இருந்து 3 மணி வரை தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார்.
வாக்குசாவடிகளில் சிறப்பு ஏற்பாடு
மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்படும். வாக்குச்சாவடிக்கு 3 உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கிருமி நாசினி தெளிப்பதற்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்வதற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதற்கும் 3 உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குச்சாவடி மையத்தில் உள்ள BLOக்கு (BLO - பூத் நிலை அலுவலர்கள்) சீருடை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ராகுல் காந்தி பரப்புரை
கல்லூரியில் ராகுல் காந்தி பரப்புரை செய்த்தது தொடர்பாக புகார் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அறிக்கை பெறப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.