சென்னை: அயப்பாக்கத்தில் உள்ள இந்தியன் மெடிக்கல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு அளிக்கக்கூடிய சிகிச்சை, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை சார்பில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 1,858 மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, 965 நடமாடும் மருத்துவ முகாம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடமாடும் மருத்துவ வாகனம்
பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க அயப்பாக்கம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து 1,150 நடமாடும் மருத்துவ வாகனம் தொடங்கப்பட்டு உள்ளது. 120 கோடி ரூபாய் செலவில் மருந்து மாத்திரைகள் அரசிடம் கையிருப்பில் உள்ளது. மழைக்காலம் முடியும் வரை காய்ச்சிய குடிநீரை மக்கள் பயன்படுத்த வேண்டும்.
மாவட்ட அலுவலர்கள் பொதுமக்கள் குடிக்கும் தண்ணீரின் குளோரின் அளவை கணக்கிட வேண்டும். வீடுகளுக்கு தேடி சென்று மக்களுக்கு மருத்துவம் அளிக்கப்படும். 6 கோடி பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர் என்கிற இலக்கை தமிழ்நாடு எட்டியுள்ளது. டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சுகாதாரத் துறை எடுத்து வருகிறது.
மருத்துவ முகாம்
வடசென்னையில் மழை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மழை காலங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 1,303 அவசர சிகிச்சை ஊர்திகள் தயார் நிலையில் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை: மக்களுக்குத் தேவையான உணவு தயார் - கே.என். நேரு