சென்னை: சென்னையில் இருந்து இன்று (செப்.27) இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 250 பேருந்துகளும், செப்.29ஆம் தேதி 450 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதேபோல், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் ஆயிரத்து 100 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்த வார இறுதியில், தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பகுதிகளுக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. நாளை (செப்.28) மிலாடி நபி, செப்.30ஆம் தேதி 4ஆவது சனிக்கிழமை, அடுத்த நாள் (அக்.1) ஞாயிற்றுக்கிழமை அதைத் தொடர்ந்து அக்.2 காந்தி ஜெயந்தி என தொடர்ந்து விடுமுறைகள் அமைந்துள்ளன.
இதில், இடையில் வரும் வெள்ளிக்கிழமை (செப்.29) ஒரு நாள் விடுப்பு அல்லது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் (work from home) பட்சத்தில் தொடர்ந்து ஐந்து நாள்கள் விடுப்பு கிடைப்பதால், சென்னையில் மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து இங்கு வேலை செய்பவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, பள்ளிகளில் காலாண்டு விடுமுறை வருகிறது.
மேலும் ஊட்டி, கொடைக்கானல் ஆகியவற்றில் இரண்டாவது சீசனும் தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் சொந்த ஊர்களுக்கு, சுற்றுலாத் தலங்களுக்கும் படை எடுப்பார்கள். இதனால், சென்னையில் இருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்ட தமிழ்நாடு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து போக்குவரத்துக் கழகம் சார்பில் கூறப்படுவதாவது, “தொடர் விடுமுறையால் பயணிகள் முன்பதிவு அதிகாமவே உள்ளது. அதனால், கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்கள் இயக்க திட்டமிட்டுள்ளது. சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள இன்று (செப்.27) அன்று 16ஆயிரத்து 980 பயணிகளும், செப்.29ஆம் தேதி அன்று 14ஆயிரத்து 473 பயணிகளும், அக்.03ஆம் தேதி அன்று 7ஆயிரத்து 919 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு இன்று (செப்.27) தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 250 பேருந்துகளும் மற்றும் செப்.29ஆம் தேதி அன்று 450 பேருந்துகளும் இயக்கப்ப்டவுள்ளன.
பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் ஆயிரத்து 100 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அக். 2ஆம் தேதி அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 17ஆயிரத்து 242 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் tnstc என்ற அதிகாரப்பூர்வமான செயலியில் Official App மூலமும் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் பதற்றம் தணிந்ததால் ஈரோடு - மைசூரு இடையே பேருந்து சேவை துவங்கியது!