தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த கோபால் கடந்த 1966ல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு முடித்து சென்னைக்கு வந்தவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்எஸ் படித்துள்ளார். மருத்துவ படிப்பு முடித்த அவர் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றினார்.
கடந்த 2002ஆம் ஆண்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பிரபல அறுவை சிகிச்சை நிபுணராகவும் மருத்துவ பேராசிரியராகவும் பணியாற்றி பெயரெடுத்த மருத்துவர் கோபால் கடந்த 1969ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் சிறியதாக கிளினிக் வைத்து மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்
ஆரம்பத்தில் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து மக்களுக்கு சேவையாற்றிய அவர் 1976ஆம் ஆண்டு முதல் ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து சில்லரை தட்டுப்பாடு காரணமாக மக்களாகவே அவருக்கு பத்து ரூபாய் வழங்கி மருத்துவம் பார்த்து வந்தனர். அதேசமயம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரைகளையும் வழங்கிவந்தார்.
இச்சூழலில், மனைவியை இழந்த மருத்துவர் கோபால் வண்ணாரப்பேட்டையில் கிளினிக்கில் தங்கி மருத்துவம் பார்த்துவந்தார். 77 வயதான மருத்துவர் கோபால் உடல்நலம் சரியில்லாமல் இன்று உயிரிழந்தார். அவருடைய இறப்பு பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் ஐந்து ரூபாய் மருத்துவம் பார்த்து உயிரிழந்த ஜெயச்சந்திரனின் மறைவு மக்களிடையே நீங்காமல் உள்ள நிலையில் மீண்டும் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் கோபால் உயிரிழப்பு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.