சென்னை: ஓட்டேரி பிரிக்லின் சாலை மேம்பாலம் அருகே நேற்றிரவு (ஜூலை.15) காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே சென்ற ஆட்டோவை மடக்கி சோதனையிட்டனர்.
இச்சோதனையில் ஆட்டோவில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் சென்னை, நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெயபால் (43), மதுரையைச் சேர்ந்த தினேஷ்குமார் (31), லட்சுமணன் (29), பாலகுரு (27) என்பது தெரியவந்தது.
இவர்களில், மதுரையைச் சேர்ந்த மூன்று பேரும் மாதத்திற்கு ஒருமுறை அங்கிருந்து கஞ்சாவை மொத்தமாக எடுத்து சென்று, விடுதியில் தங்கி சென்னையில் கஞ்சா விற்பது தெரியவந்தது. அவ்வாறு சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு கஞ்சாவை விற்க செல்லும்போது வாகன சோதனையில் காவல் துறையினரிடம் இவர்கள் வசமாக சிக்கியுள்ளனர்.
தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: நால்வர் மீது வழக்குப்பதிவு!