சென்னையில் பல்வேறு இடங்களில் போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பலர் நில மோசடியில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த சில நாள்களில் மட்டும் இது குறித்து வெவ்வேறு இடங்களில் 10 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதையடுத்து, குற்றப்பிரிவு காவல் துறையினரால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சென்னை பள்ளிக்கரணை ராம் நகரில் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த ஆதித்யா வித்யாலயா பள்ளி தாளாளர் பஞ்சமூர்த்தி என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். நிலத்தின் உரிமையாளரான மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த சுஜாதா என்பவர்போல் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் மோசடிசெய்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் கொடுத்த புகாரின்பேரில், மதுரவாயல் வரலட்சுமி நகரில் போலி ஆவணம், ஆள்மாறாட்டம் செய்து இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நான்காயிரத்து 800 சதுரஅடி நிலத்தை மோசடிசெய்த, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ், ரமேஷ் என்ற சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இதேபோன்று ஆள்மாறாட்டம், போலி ஆவணம் மூலம் மோசடிசெய்து மடிப்பாக்கத்திலுள்ள ஒரு கோடி ரூபாய் நிலத்தை அபகரித்து குடியிருப்புகள் கட்டி விற்பனைசெய்த விவகாரத்தில், ஆள்மாறாட்டம் செய்த ராஜமன்னார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். நாகலிங்க மூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சசிகலா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இறந்த அவரது கணவரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடிசெய்த காஜாமைதீன், மோகன், ராமையா ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அம்பத்தூர் சிவப்பிரகாசம் நகரில் 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று போலி ஆவணம் மூலம் தாத்தாவின் இரண்டரை கோடி மதிப்புள்ள திருநின்றவூரில் இருக்கும் இடத்தை, போலி ஆவணங்கள் மூலம் பேரன்கள் உள்பட மூன்று பேர் அபரிக்க முயன்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நம்பிக்கைநாதன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், பேரன்கள் வெங்கடேசன், முத்து, சாட்சி கையெழுத்துப்போட்ட புண்ணியகோடி ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவிலுள்ள நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால், சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை சென்னையில் மீட்டுள்ளனர். இந்த நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணம் மூலம் மோசடி செய்த 10 பேரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் ரூ.2.50கோடி சொத்து அபகரிப்பு: சகோதரர்கள் கைது!