சென்னை: இலங்கையிலிருந்து சென்னைக்கு இரண்டு விமானங்களில் கடத்திவரப்பட்ட ரூ. 73 லட்சம் மதிப்புடைய 1.4 கிலோ தங்கப்பசையை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் 2 பேரை கைது செய்துள்ளனர். இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (ஏப்ரல் 3) வந்தது.
அதில் வந்த பயணிகளிடம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, இலங்கையைச் சேர்ந்த 38 வயது பெண் பயணி ஒருவர் சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னைக்கு வந்திருந்தார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை முழுமையாக சோதனையிட்ட போது அவர் வைத்திருந்த கைப்பைக்குள் 6 பிளாஸ்டிக் பவுச்சிகள் இருந்தன.
இவற்றை சுங்க அதிகாரிகள் திறந்து பார்த்த போது அதில் தங்கப்பசை மறைத்து எடுத்துவரப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 6 பவுச்சிகளிலும் 725 கிராம் தங்கப் பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 37.25 லட்சமாகும். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை பெண் பயணியை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதித்த போது சென்னையைச் சேர்ந்த 32 வயது ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை சோதனை செய்து பார்த்தபோது அவருடைய உள்ளடைக்குள் 2 பார்சல்களை மறைத்து வைத்துள்ளார் என்பது தெரியவந்தது.
அந்த பார்சலில் 700 கிராம் தங்கப் பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 36 லட்சமாகும். இதையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியை கைது செய்தனர். அந்த வகையில் மொத்தமாக ரூ. 73 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ 420 கிராம் தங்கப் பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 2 கிலோ தங்க கட்டிகளை ரோட்டில் வீசிவிட்டு தப்பியோடிய கும்பல்.. சென்னையில் நடந்தது என்ன?