திருவனந்தபுரத்திலிருந்து சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு இன்று (ஏப். 6) காலை இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் வந்தது. பொதுவாக உள்நாட்டு விமான பயணிகளிடம் சுங்கச்சோதனை கிடையாது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக சுங்க அலுவலர்கள் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் திடீா் சோதனை நடத்தினர்.
அப்போது கேரளாவை சோ்ந்த முகமது அநாஸ் (28) என்ற பயணி மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர் அணிந்திருந்த ஷு சாக்ஸ்க்குள் 1.28 கிலோ தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
விசாரணையில், சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் தங்கக்கட்டிகள் கடத்திவரப்பட்டிருக்கிறது. அப்போது விமான இருக்கைக்கு அடியில் தங்கக்கட்டிகளை மறைத்துவைத்துவிட்டு கடத்தல் ஆசாமி திருவனந்தபுரத்தில் இறங்கி விட்டார். அதே கடத்தல் கும்பலைச் சேர்ந்த முகமது அநாஸ், அதே விமானத்தில் உள்நாட்டு பயணியாக ஏறிவந்துள்ளார். பின்னர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, ஏற்கனவே சீட்டிற்கு அடியில் மறைத்துவைத்திருந்த தங்கக்கட்டிகளை எடுத்து தனது கால் ஷு சாக்ஸ்களில் மறைத்து வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து லக்னோவிலிருந்து இன்று (ஏப். 6) காலை சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்த மற்றொரு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான பயணிகளையும் சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையை சோ்ந்த நைனார் முகமது(30) என்ற பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவருடைய ஷு சாக்ஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 446 கிராம் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூ.80 லட்சம் மதிப்புடைய 1.72 கிலோ தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல் செய்தனர். தற்போது இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : ஜார்ஜ் ப்ளாய்டை நினைவுபடுத்தும் தாக்குதல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்