கரோனா பாதிப்பு காரணமாக பொதுப் போக்குவரத்து முடக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 1ஆம் தேதிமுதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்து சேவை தொடங்கப்பட்ட நாளன்றே 6 லட்சம் பேர் பயணம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், தற்போது நாளொன்றுக்கு இரண்டாயிரத்து 400 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், அதில் சுமார் 10 லட்சம் பேர் பயணித்துள்ளதாகவும் மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் புறநகர் ரயில்கள் அமைந்துள்ள கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, தாம்பரம், அம்பத்தூர், ஆவடி, மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒட்டுமொத்தமாகச் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் இதுவரையில் ஒரு கோடியே 23 லட்சம் பேர் மாநகரப் பேருந்துகளில் பயணித்ததாகவும், இதன்மூலம் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகச் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.