சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் குழந்தைகளுக்கான 25 விழுக்காடு ஒதுக்கீட்டின்கீழ், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள 1 லட்சத்து 34 ஆயிரத்து 400 இடங்களில் சேர்ப்பதற்கு ஜூலை 5ஆம் தேதி (நாளை) முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டயாக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரும், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநருமான கருப்பசாமி கூறியதாவது, "தமிழ்நாட்டில் உள்ள 3,696 மெட்ரிக்குலேசன் பள்ளிகள், நர்சரி பிரைமரிப் பள்ளிகளை சேர்த்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் பள்ளிகளில், 1 லட்சத்து 13 ஆயிரத்து 400 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் என்ன சொல்கிறது?
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன் படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகளை 25 விழுக்காடு இடங்களில் சேர்க்க வேண்டும். இந்த சட்டம் 2013ஆம் ஆண்டு முதல் 2020-21 ம் கல்வியாண்டு வரையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
தற்போது கரோனா தொற்று காரணமாக சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெற்று, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நுழைவு வகுப்புகளில் (எல்கேஜி, ஒன்றாம் வகுப்பு) 2021-22ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும்.
25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ள விவரங்களைத் தனியார் பள்ளிகள் அறிவிப்புப் பலகையிலும், பள்ளிக்கல்வித் துறையின் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்திலும் ஜூலை 3ஆம் தேதி வெளியிடவேண்டும்.
நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
மாணவர்களின் பெற்றோர் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நுழைவு நிலை வகுப்புகளில் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் இருப்பிடத்திற்கும், பள்ளிக்கும் இடையே 1 கி.மீ தூரத்திற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வரும் பெற்றோர் மாணவரின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், ஆதார் அல்லது குடும்ப அட்டை, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ் , சிறப்புப் பிரிவினர் எனில் அதற்கான சான்றிதழை எடுத்து வரவேண்டும்.
பெற்றோர் விண்ணப்பம் செய்வதற்கு கல்வித்துறை அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்குசென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் பள்ளிகளிலும், கல்வித்துறை அலுவலகங்களிலும் விளம்பரப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த மாணவர்களில் தகுதியான மாணவர்களின் விவரங்களைப் பள்ளிகள், அறிவிப்புப் பலகையிலும், பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்திலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிட வேண்டும்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி பள்ளியில் உள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால், குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதேபோல பள்ளிகளில் உள்ள இடங்களைவிட குறைவாக விண்ணப்பித்து இருந்தால் தேர்வு செய்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்களை ஆகஸ்ட் 14ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலரிடம் தனியார் பள்ளிகள் ஒப்படைக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்