சென்னை: இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று (ஜூன் 27) நள்ளிரவு வந்தடைந்தது. இதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 37 வயது ஆண் பயணி ஒருவா், இலங்கைக்கு சுற்றுலா பயணிகள் விசாவில் சென்று விட்டு வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
வியாபாரியான இவா் இலங்கையிலிருந்து கிராம்பு, ஏலம், தேயிலைப் போன்ற பொருட்களை வாங்கி வந்துள்ளார். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் அவருடைய உடைமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். உடைமைகளிலும் ஏதும் இல்லை. இருப்பினும், அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனையிட்டனர்.
அப்போது, அவருடைய உள்ளாடைக்குள் மூன்று பார்சல்களை மறைத்து வைத்திருந்தார். அந்த பாா்சல்களை எடுத்து திறந்து பார்த்தபோது, தங்கப்பசை இருந்ததை கண்டுபிடித்தனர். ஒரு கிலோ 90 கிராம் அளவுள்ள அந்த தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.50,51,000 ஆகும். இதனையடுத்து அந்தப் பயணியை கைது செய்த சுங்க அலுவலர்கள், தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பாலியல் தொழிலுக்கு வருமாறு மிரட்டல் - துணை நடிகை புகார்