செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்டது நெல்வாய் பாளையம். இங்கு அப்பு என்கிற விவேக் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். கூலித் தொழிலாளியான விவேக்கிற்கு ஜெகதீஸ்வரி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். விவேக் தம்பதியினர் வசித்த அதே தெருவில் ஏகாம்பரம் என்பவரும் வசித்து வந்தார்.
இவருக்கும் திருமணமாகி, பெண் பிள்ளை ஒருவரும் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏகாம்பரம் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகத் தெரிகிறது. நெல்வாய் பாளையம் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு சென்ற ஏகாம்பரம், வார விடுமுறை நாட்களில் மட்டுமே சொந்த கிராமத்திற்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்குள், ஏகாம்பரத்துக்கும் விவேக்கின் மனைவி ஜெகதீஸ்வரிக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே நேற்று (மார்ச் 25) காலை விவேக் தனது வீட்டிலேயே இறந்த நிலையில் கிடந்துள்ளார். கணவனின் இறப்பை ஊருக்குத் தெரிவித்த மனைவி ஜெகதீஸ்வரி அழுது புலம்பியுள்ளார்.
துக்க நிகழ்வுக்கு வந்த விவேக்கின் உறவினர்கள் சிலர் பார்வையில் இறந்தவரின் கழுத்தில் நெரிக்கப்பட்டதை போல் காயம் இருப்பது தென்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விவேக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அணைக்கட்டு போலீசாருக்கு அவரது உறவினர்கள் சிலர் தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பின் உத்தரவுப்படி செய்யூர் வட்டார காவல் ஆய்வாளர் ஞானசேகரன், அணைக்கட்டு உதவி ஆய்வாளர் தேவதாஸ், தனிப்பிரிவு தலைமைக் காவலர் விஜய் ஆகியோர் விவேக்கின் சடலத்தை உடனடியாகக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு தீவிர விசாரணையிலும் ஈடுபட்டனர்.
போலீசாரின் விசாரணையில் ஜெகதீஸ்வரி முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. தொடர் விசாரணையில், ஏகாம்பரத்துக்கும் ஜெகதீஸ்வரிக்கும் குறுகிய காலத்தில் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதும், அதன் காரணமாக சம்பவ நாளன்று விடியற்காலையில் தனது கணவன் விவேக்கை ஜெகதீஸ்வரி தனது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து கொலை செய்த ஜெகதீஸ்வரி மற்றும் கொலைக்குக் காரணமான ஏகாம்பரம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவனை கழுத்தை நெரித்துக் கொன்ற ஜெகதீஸ்வரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், விரைந்து செயல்பட்டு குறுகிய காலத்தில் கொலையாளிகளையும் கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடித்த காவல்துறையினரின் செயலை அப்பகுதி வாசிகள் பாராட்டுகின்றனர்.
இதையும் படிங்க: பெற்றோருக்காக காதலை மறுத்த பெண்: ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்; கோவையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்