செங்கல்பட்டு: ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. அந்த வகையில் ஜி20 மாநாட்டிற்காக அமர்வுகள் நாடு முழுவதும் சுமார் 200 இடங்களில் நடைபெற உள்ளன. அதனொரு பகுதியாக சென்னை ஐஐடியிலும், கோவளம் பகுதியிலும் அமர்வுகள் நடைபெற உள்ளன.
அதற்காக 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். சென்னை அமர்வு முடிந்த பிறகு, அமர்வில் பங்கேற்கும் பன்னாட்டு பிரதிநிதிகள் தமிழ்நாட்டின் உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்திற்கு வருகை தந்து பார்வையிட உள்ளனர்.
இதனை முன்னிட்டு நாளை (பிப்.1) மாமல்லபுரத்திற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேநேரம் வெளிநாட்டு பார்வையாளர்கள் வருகையை ஒட்டி, மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று (ஜன.30) புதுச்சேரியில் ஜி 20 மாநாட்டின் அறிவியல் கூட்டம் நடைபெற்றதும், அதில் பருவகால மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் ஜி20 அறிவியல் மாநாடு தொடங்கியது