செங்கல்பட்டு: மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளம் பாதித்த செங்கல்பட்டு மாவட்டத்தில் முடிச்சூர், வண்டலூர் வெளிவட்ட சாலை, அடையார் ஆறு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரதராஜபுரம், ராயப்பாநகர், பிடிசி காலணி உள்ளிட்ட பகுதிகளை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் திறன் மேம்பாட்டுத் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று (டிச 10) நேரில் பார்வையிட்டார்.
மேலும் பாதித்த பகுதிகளின் புகைப்பட காட்சிகள், ஏரி நீர் நிலை ஆறுகள் குறித்து வரைபட காட்சிகளைப் பார்வையிட்டு வெள்ள சேதங்களைக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் ராகுல்நாத் மற்றும் நீர்வளம், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "சென்னை மக்கள் புயல் மழையால் பாதிப்பு அடைந்து சம்பவத்தால் பிரதமர் மோடியை மிகவும் மனவேதனையில் உள்ளார். சென்னை மக்களின் நிலையை அவர் முழுவதுமாக அறிந்துள்ளார்.
அதனால் தமிழக அரசுக்கும் சென்னை மக்களுக்கும் தேவையான எந்தவிதமான உதவியையும் பிரதமர் மோடி அரசு முன்வந்து செய்யத் தயாராக உள்ளது. இதன் வெளிப்பாடாகத்தான் தற்போது நான் நேரில் பார்வையிட இங்கு வந்துள்ளேன். இந்த ஆய்வு குறித்தும் மக்களின் தேவை குறித்தும் அறிக்கையாகப் பிரதமருக்கு அனுப்ப உள்ளேன் அவர் 100 சதவிகிதம் உதவி புரிவார்.
மேலும் ஏற்கனவே முதல் தவணையாக ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்கி உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிவாரணத்தை 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஈபிஎஸ் வலியுறுத்தல்!