சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டுக்கு அடுத்து மாமண்டூர் என்ற இடத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகப் பயண வழி உணவகம் உள்ளது.
1990ஆம் ஆண்டு இந்த உணவகம் தொடங்கப்பட்டது. நெடுஞ்சாலையில் பயணிக்கும், குறிப்பாக அரசுப் பேருந்துகளில் பயணிக்கும், சாமானிய மக்களின் பசியாற்ற இந்த உணவகம் திறக்கப்பட்டது.
நியாயமான விலையில் தரமான உணவு
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள தனியார் உணவகங்களில், தரமற்ற, சுகாதாரமற்ற உணவுகள், கொள்ளை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே, அரசுப் பேருந்து பயணிகள், நியாயமான விலையில் தரமான உணவை உண்ண வேண்டும் என்ற நோக்கத்திற்காக, இந்த உணவகம் அரசுப் போக்குவரத்து கழகத்தால் தொடங்கப்பட்டது.
தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைப்பு
ஆனால், நாளடைவில் நிர்வாக சிக்கலைக் காரணம் காட்டி, இந்த உணவகத்தை தனியார் ஒப்பந்ததாரர்களிடம், போக்குவரத்துக் கழகம் வாடகை அடிப்படையில் அளித்தது. இதனால் மற்ற தனியார் உணவகங்களைப் போலவே, இந்த உணவகத்திலும், அநியாய விலைக்கு சுகாதாரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
கழிப்பறை பயன்பாடுக்கு அடாவடி வசூல்
இங்கிருக்கும் கழிப்பறைகளில், பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தனியார் ஒப்பந்ததாரர்கள் வசம் விடப்பட்டவுடன், கழிப்பறைக்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை அடாவடி வசூல் செய்யும் நிலை தொடர்கிறது.
அரசுப் போக்குவரத்து கழகம் சீரமைக்க கோரிக்கை
தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாததால், இந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனை ஒப்பந்ததாரர்கள் வசம் விடாமல், அரசுப் போக்குவரத்து கழகமே சீரமைத்து, தரமான உணவுகளை நியாயமான விலையில், பேருந்துப் பயணிகளுக்கு அளிக்க வேண்டும் என்பதே, அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: 'என்னது பிரியாணி பிடிக்கலையா...' வாடிக்கையாளர்களுக்கு அடி உதை