செங்கல்பட்டு: கிணற்றில் விழுந்த சிறுவனை தீயணைப்புத் துறையினர் மீட்க அலட்சியம் காட்டியதால் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுராந்தகம் அடுத்த போந்தூர் ஊராட்சிக்குட்பட்ட சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் வேகேஷ் (12). அங்குள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவந்தார். இவர் நேற்று பகல் ஒரு மணியளவில் தனது மூன்று நண்பர்களுடன் அக்கிராமத்தின் அருகேயுள்ள விவசாய நிலத்திலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
நீச்சல் தெரியாத வேகேஷ், கிணற்றின் கரையோரம் நின்று குளிக்கையில் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். இதனால் அவரது நண்பர்கள் கூச்சலிட, அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாக தேடியும் சிறுவனின் உடல் கிடைக்காததால் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போந்தூர் வாக்குச்சாவடியை இழுத்து மூடி தேர்தலை புறக்கணிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மதுராந்தகம் துணை காவல் கண்காணிப்பாளர் கவினா தலைமையிலான காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு கிணற்றில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியினை மேற்கொண்டனர். இரண்டாவது முறையாக நடந்த இந்த தேடும் பணியில் வேகேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.
உடனடியாக அவரது உடலை கைபற்றிய காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.