காவல் துறை உங்கள் நண்பன். இந்த வாசகத்தை அன்றாடம் மெய்ப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள், நமது காவலர்கள். இதை வேலையாக இல்லாமல் கடமையாக நினைப்பதால் தான் கரோனா கால ஊரடங்கிலும் பொதுநலம் காத்து நின்றனர். தமிழ்நாட்டில் தலைசிறந்த காவல் துறை அலுவலர்களை, தமிழ்நாடு போலீஸ் அகாடமி உருவாக்கி வருவதாக, அதன் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஈ டிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பெருமையுடன் தெரிவிக்கிறார்.
தமிழ்நாடு போலீஸ் அகாடமி:
செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில், ஏறத்தாழ 130 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் எனும் போலீஸ் அகாடமி. 2008ஆம் ஆண்டு, தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சியகத்தின் முக்கியக் குறிக்கோள், நேரிடையாகத் தேர்வு செய்யப்படும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு, மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்ப, சிறந்த பயிற்சி அளிப்பதாகும். தற்போது, 11ஆவது பேட்ச்சை சேர்ந்த நேரடி காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு இங்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இயற்கை சூழ்ந்த, பரந்துவிரிந்த இந்தப் பயிற்சி வளாகத்தினுள், நூலகம், நீச்சல் குளம், மாதிரி காவல் நிலையம், உடற்பயிற்சிக்கூடம், மருத்துவமனை போன்ற பல வசதிகள் உள்ளன. இங்கு அனுபவம் வாய்ந்த துறைசார் அலுவலர்களை வைத்து, பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
சமுதாயப் பணியே முழு முதற் கடமை:-
இதுகுறித்து கூறிய பயிற்சியக இயக்குநரும், தமிழ்நாடு காவல் துறையின் கூடுதல் இயக்குநருமான டேவிட்சன் தேவாசீர்வாதம், "காவல்துறை பணி என்பது சமுதாயம் சார்ந்த பணியாகும். சமுதாயத்தின் தேவையற்ற நோய்களைத் தீர்க்கும் மருத்துவப் பணியைப் போன்றது. எனவே, இதற்கென சில வரையறைகள் உள்ளன. சமுதாயச் சூழல், களநிலவரம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, மிக எச்சரிக்கையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பணியை செய்ய வேண்டும்.
இந்த பயிற்சியகத்தில், காவல் துறை அலுவலர்கள் குறிப்பிட்ட சூழலில் மக்களின் மனநிலையை அறிந்து கொண்டு, அதற்கேற்ப சூழ்நிலையைக் கையாள்வது குறித்து அனுபவங்களின் வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை அணுகி அவர்களின் குறைகளுக்கு நல்ல தீர்வு காண்பது, அதற்கானத் தகுதியை வளர்த்துக் கொள்வது குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் அலுவலர்களுக்கு வேண்டிய குழு மனப்பான்மை, நேர்மையாகப் பணிபுரிதல், குற்றங்கள் பற்றிய புலன்விசாரணை, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தருதல் போன்ற, இன்றியமையாத பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன" என்றார்.
பாறைகளில் ஏற்கெனவே சிற்பங்கள் மறைந்துள்ளன!
புகழ்பெற்ற சிற்பியான மைக்கேல் ஏஞ்சலோவிடம் ஒருவர் கேட்டார். 'நீங்கள் எப்படி பாறைகளிலிருந்து தலைசிறந்த சிற்பங்களை உருவாக்குகிறீர்கள்!?' அதற்கு மைக்கேல் ஏஞ்சலோ கூறினார், 'பாறைகளில் சிற்பங்கள் ஏற்கெனவே மறைந்துள்ளன!. அவற்றை வெளிக்கொணர்வது மட்டுமே என்னுடைய பணி'. அதுபோலவே, நவீன குரு குலமாக விளங்கும் இந்த காவல் உயர் பயிற்சியகம், காவல் துறையில் விரும்பிப் பணியாற்றி வருவோருக்கு, தேவையான தகுதிகளையும், திறமைகளையும், பண்புகளையும் அவர்களுக்குள் இருந்தே வெளிக்கொணர்கிறது என்பது நிதர்சனமான உண்மை.