செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தினரிடையே பேசிய அவர், ”அதிமுக உடைந்து ஆட்சி கலையும் என ஸ்டாலின் கடந்த நான்கு ஆண்டுகளாகவே பேசி வருகிறார். அடுத்த 5 ஆண்டுகளுக்கும் அவர் இப்படியேதான் பேச வேண்டியிருக்கும்.
ஏற்கனவே மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்குவாரா அல்லது திமுகவை உடைப்பாரா என்ற குழப்பத்தில் அவர் உள்ளார். எனவே, முதலில் திமுக உடையாமல் ஸ்டாலின் பார்த்துக்கொள்ளட்டும். அதிமுக உடைவது பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். செல்லுமிடமெல்லாம் கலைஞரின் மகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஸ்டாலினுக்கு, நான் விவசாயி என்று கூறிக்கொள்வது பொறுக்கவில்லை.
வரும் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றால், அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். தொடர்மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அது முடிந்தவுடன், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கண்டிப்பாக நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் - முதலமைச்சர்அறிவிப்பு