செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கீழ்வாசல் பகுதியைச் சேர்ந்த தீப்பாஞ்சியான் மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரும் சகோதரர்கள். இவர்களுக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. இதனை பாகப்பிரிவினையாக ஆளுக்கு 1.5 ஏக்கர் என நிலத்தைப் பிாித்துக்கொண்டு விவசாயம் செய்து வந்துள்ளனர். மேலும் அதில் இருவருக்கும் சொந்தமாக ஒரு விவசாயக் கிணறும் பொதுவில் இருந்துள்ளது.
இதனிடையே சுப்பிரமணி தனக்கு அருகிலிருந்த 50 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த 50 சென்ட் நிலத்திற்கு பொது கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சக் கூடாது என அவரது அண்ணன் தீப்பாஞ்சியான் அடிக்கடி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை சுப்பிரமணி வழக்கம்போல் வயல்வெளிக்கு பொது கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற அவரது அண்ணன் மற்றும் அண்ணி சுப்பிரமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின் வீடு திரும்பியுள்ளனர். நடந்த சம்பவத்தை தீப்பாஞ்சியான், தனது மகன் குமரகுருவிடம் தெரிவித்துள்ளார். தனது தாய், தந்தையை அவதூறாகப் பேசிய சித்தப்பாவைப் பழி வாங்க குமரகுரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, இன்று அதிகாலையே வயல்வெளிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த மோட்டார் அறையில் உறங்கிக்கொண்டிருந்த சுப்பிரமணியின் தலையில் கல்லைப்போட்டு குமரகுரு கொலை செய்துள்ளார். இதையடுத்து சுப்பிரமணியின் உடலை மறைப்பதற்காக, யாருக்கும் தெரியாமல் மோகன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் வீசிவிட்டு, எதுவும் தெரியாதது போல் குமரகுரு வீடு திரும்பியுள்ளார்.
இதையடுத்து, நேற்று இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற தன் தந்தை வீட்டிற்கு வராததால், சுப்பிரமணியின் மகன் ரூபேஷ் வயல்வெளிக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது வயல்வெளிக்கு அருகிலிருந்த விவசாயக்கிணற்றில், தனது தந்தை சடலமாக கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்த ரூபேஷ், உடனடியாக சித்தாமூர் காவல் நிலையத்திற்குத் தகவலளித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சுப்பிரமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுராந்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத் தொடர்ந்து தனது தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, ரூபேஷ் காவல் துறையிடம் புகாரளித்துள்ளார்.
அதன்பின் விசராணை மேற்கொண்ட காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து குமரகுருவிடம் விசாரணை மேற்கொண்டதில், தான் தான் கொலை செய்து, சித்தப்பாவின் உடலைக் கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து குமரகுரு மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:காதலியைக் குத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட கபடி வீரர்