செங்கல்பட்டு: மாமல்லபுரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த சுற்றுலாத் தலம். பல்லவ மன்னர்களின் சிற்பக்கலை மற்றும் கடல் வாணிபம் போன்றவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக மாமல்லபுரம் விளங்கி வருகிறது. மாமல்லபுரத்தில் இரு நாட்களுக்கு முன் கடல் அரிப்பு ஏற்பட்டு உள்வாங்கியது.
அப்போது, பழமை வாய்ந்த கல்லாலான கோவில் கலசம், தூண்கள், பழங்காலத்து செங்கற்கள் போன்றவை கரை ஒதுங்கின. மாமல்லபுரத்தில், கடற்கரைக் கோவில் ஏற்கனவே உலகப் பிரசித்தி பெற்றது. மாமல்லையை ஆட்சி செய்த மன்னர் 7 கோயில்கள் கட்டியதாகவும், அவற்றில் ஆறு கோவில்கள் கடலுக்குள் மூழ்கியதாகவும் நம்பப்படுகிறது.
தற்போது கடல் அரிப்பால் வெளிப்பட்டுள்ள கலசம் தூண்கள் போன்றவை அவ்வாறு மூழ்கிய கோவில்களின் சிதிலங்களாக இருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் கருதுகின்றனர். பானை ஓடுகள், பழங்கால நாணயங்கள் போன்றவையும் அப்பகுதியில் கிடைத்து வருகின்றன. தொல்லியல் துறையினர் இப்பகுதியை ஆய்வு செய்தால் பிரமிப்பு ஏற்படுத்தக்கூடிய பல விஷயங்கள் வெளிப்படும் என தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இதையும் படிங்க:63 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நிலம் கண்ட முதல் சீன அதிபர்!