செங்கல்பட்டு மாவட்டம் ராட்டினங்கிணறு பகுதியில் ஜே.பி. காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகம் உள்ளது. ஐயம்பெருமாள் என்பவருக்கு சொந்தமான இந்த வணிக வளாகத்தில், பிரியாணி கடை, மளிகைக் கடை, காய்கறி கடை என பல கடைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், இன்று (டிச.31) காலை திடீரென அந்த வணிக வளாகத்திற்கு வந்த ரவுடிகள் சிலர், வளாகத்திலிருந்த கடைகளை அடித்து நொறுக்கினர்.
பின்னர், அந்த வளாகத்தில் கடை வைத்திருந்த பட்டுராஜா என்பவரையும், ஊழியர் அழகர் என்பவரையும் கத்தியால் வெட்டினர். இதனைக் கண்ட பொதுமக்களும், வளாகத்திற்கு வந்திருந்த வாடிக்கையாளர்களும் அலறியடித்து ஓடினர்.
காவல் துறை விசாரணை:
இதையடுத்து, காயம்பட்டவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், எதற்காக இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தூக்க மாத்திரை தரமறுத்த மருந்தக ஊழியருக்கு அரிவாள் வெட்டு!